×

மணல் கொள்ளையால் வறண்ட செய்யாறு - அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு பள்ளம் தோண்டி தண்ணீர் நிரப்பும் அவலம்

கலசபாக்கம்: மணல் கொள்ளையால் கலசபாக்கம் செய்யாறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இன்று நடைபெறும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக பள்ளம் எடுத்து தண்ணீரை நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதிகளில் கடந்த மாதம் தொடர்மழை பெய்ததால் இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் மிருகண்டா அணை நிரம்பியுள்ளது.

இதனால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால், கலசபாக்கம் செய்யாற்றில் தொடரும் மணல் கொள்ளையால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை ஆதரவோடு மணல் கொள்ளை தொடர்ந்து நடப்பதால் செய்யாறு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், ரத சப்தமியை முன்னிட்டு கலசபாக்கம் செய்யாற்றில் இன்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி புறப்படுகிறார்.
ஆனால், செய்யாற்றில் தண்ணீர் இல்லாததால் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்து தண்ணீர் நிரப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தொடர்மழை பெய்தும்கூட செய்யாற்றில் மணல் கொள்ளை காரணமாக வெள்ளம் வராததால் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தக்கூட தண்ணீர் இல்லையே என பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : Annamalaiyar Tirthavari , Annamalai
× RELATED மாசி மாத ரத சப்தமியையொட்டி கலசபாக்கம்...